அந்நிய நேரடி முதலீடு 47.8%உயர்வு..
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 47.8%உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 16.17பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக மத்திய அரசின் தொழிற்சாலை மற்றும் உள்ளூர் வணிகத்துறை தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகள் 10.94பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருந்தது. 25 நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஈக்விட்டி, வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் வருகை மற்றும் பிற மூலதனங்கள் வாயிலாக மொத்த தொகை 22.49 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள முதலீடுகளில் சிங்கப்பூரின் பங்குகள் அதிகம் உள்ளன. சேவைத்துறைகள், கணினி, டெலிகாம் மற்றும் மருந்து நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்துள்ளன. சிங்கப்பூரைத் தொடர்ந்து மொரீசியஸ், அமெரிக்கா, நெதர்லாந்தில் இருந்து அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியில் இருந்து வருமானம் குறைந்துள்ளன. சேவைத்துறையில் 3.99பில்லியனும், கணினி மென்பொருள் துறையில் 2.74பில்லியனும், மற்றும் கணினி வன்பொருட்கள் உற்பத்திசார்ந்த முதலீடாக 1.03பில்லியன் அமெரிக்க டாலர்களுமாக முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்கள் வாரியாக பார்த்தால் மகாராஷ்டிரா மாநிலம் அதிகபட்சமாக 8.48பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் கர்நாடகம், தெலங்கானா மற்றும் குஜராத் அகிய மாநிலங்கள் உள்ளன.