ஃபெட் ரேட் குறைவுக்கு பிறகு நிரந்தர வருவாய் என்னாகும்?
பணவீக்கம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அண்மையில் தனது கடன்கள் மீதான வட்டி விகிதத்தை அரைவிழுக்காடு குறைத்துள்ளது. இதே அளவு இந்திய ரிசர்வ் வங்கியிலும் ரெபோ வட்டி விகிதம் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தாண்டு இறுதிக்குள் மேலும் ஒரு முறை கடன்கள் மீதான வட்டியை குறைக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மீதான வருவாய் அதிகரித்தது. ஆனால் இந்தியாவில் கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டாளர்களுக்கு லாபம் சற்றே குறைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கடன் பத்திரங்களில் 7.1%வட்டி வந்த நிலையில் தற்போது இது 6.85%ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கடன்பத்திரங்களில் சரிவு ஏற்பட்டாலும் பரஸ்பர நிதியில் பெரிய பாதிப்பு இருக்காது என்றும், நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பெரிய அளவில் பாதகமான எந்த பிரச்சனைகளும் இல்லாததால் இந்தியாவில் கடன் பத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. விலை குறைவு என்பதால் இந்தியாவில் அதிக முதலீடுகள் பத்திரங்கள் மூலம் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்தது போலவே இந்தியாவிலும் ரெபோ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், இந்தியாவில் FD எனப்படும் நிலையான டெபாசிட்டின் வட்டி குறையவும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் வங்கிகளுக்கு கடன் தரும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் உடனடி மாற்றம் வர வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் மற்றொரு தரப்பினர், காரணம் இந்தியாவில் பணவீக்கம் பெரிய அளவில் குறையவில்லை என்பதே. அமெரிக்காவில் வட்டியை குறைத்துவிட்ட நிலையில் இந்தியாவிலும் இதேபோல் வட்டி குறைக்கப்படுமா என்றால் , இந்தியா காத்திருந்து சூழலை கண்காணித்து வருவதாகவே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.