கோடிகளை முதலீடு செய்யும் யுனிலிவர் நிறுவனம்..
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி வீட்டு உபயோக பொருட்களை விற்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது யுனிலிவர் நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போட்டியாளர்களை சமாளிக்க கோடிகளில் முதலீடுகளை கொட்டவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. யுனிலிவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஃபெர்னான்டோ ஃபெர்னான்டஸ், கடந்த புதன்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார். யுனிலிவர் நிறுவனத்தின் இந்திய பிரிவான இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம், போட்டிகளை சமாளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய தலைமை நிதி அதிகாரி, யுனிலிவர் நிறுவன மகுடத்தின் முக்கியமான ஆபரணம் இந்திய பிரிவு என்று கூறியுள்ளார். உலகளவில் யுனிலிவர் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இந்துஸ்தான் யுனிவர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 11 விழுக்காடு என்று கூறினார். சோப்பு, ஷாம்பு, டிடர்ஜண்ட் உள்ளிட்ட துறைகளில் முன்னோடியாக திகழ்வதாகவும், தேயிலை மற்றும் மால்ட் கலந்த பானங்கள் தயாரிப்பதில் முன்னோடியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பல் பராமரிப்பு மற்றும் காஃபி பிரிவுகளில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் 2 ஆவது பெரிய பங்கு வகிப்பதாகவும் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ரின், டவ், லக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பெருந்தொற்று நேரத்தில் 200 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு அதிகம் விற்பனையானதாகவும், தற்போது அது குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் இந்தியாவில் தலைமுடி பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கியமானதாக திகழ்வதாகவும், இந்த துறையில் 11% வரை வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மின்னணு வணிகம் 3 மடங்கு வேகமாக வளர்வதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் தனது விற்பனையை இரண்டு மடங்காக உயர்த்தி 59,579 கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாகவும், லாபம் 10,114 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சன்சில்க்,கிளினிக் பிளஸ், லக்ஸ், ரின் ஆகிய பொருட்கள் அதிகளவில் விற்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 4-5% வளர்ச்சி அடையவே தங்கள் நிறுவனம் விரும்புவதாகவும், தங்கள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஃபெர்னான்டஸ் குறிப்பிட்டார்.