உங்க பட்ஜெட்ல இலவசங்களை நிறைவேத்துங்க:நிர்மலா சீதாராமன்
நாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சியினர் இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது கடன் சுமைகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பது போல நடந்துகொள்வதாக சாடினார். மேலும் அரசியல் கட்சியினரை விமர்சித்த நிர்மலா சீதாராமன் குறிப்பாக மின்துறை கடன் சுமை குறித்து பேசினார்.
இலவச மின்சாரம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடிக்கும் கட்சிகள், அதற்கான பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல், மின்சாரத்துறையையும் மின்சார நிறுவனங்களையும் கடனில் தள்ளுவதாக கூறினார்.
எந்த மின்சார நிறுவனங்களும் மக்களை நேரில் சந்தித்து வாக்களிக்க கோராத நிலையில்,அவர்கள் ஏன் கடனை சுமக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 புள்ளி 4 விழுக்காடாக இருக்கும் என்றும் அடுத்த 2 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கணித்திருப்பதாகவும் கூறினார். இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ள அளவும், உலக வங்கி கூறியிருக்கும் பொருளாதார வளரச்சி அளவும் கிட்டத்தட்ட பொருந்துவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.