பண்டிகை கால விற்பனையும் பணவீக்கமும்..
அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வருவாய் பாதிப்புகள் இருக்கும் நிலையில் இந்தாண்டு பண்டிகை கால விற்பனை சவால் நிறைந்ததாக இருப்பதாக எப்எப்சிஜி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. விற்பனை மற்றும் மார்ஜின் ரீதியிலும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரக்சா பந்தன் தொடங்கி தீபாவளி வரையிலான காலகட்டம் வியாபாரத்தில் மிக முக்கியமானது.. தேவை அதிகரித்துள்ளபோதும் பணவீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிகாநேர்வாலா நிறுவனத்தின் இயக்குநர் மனிஷ் அகர்வால் கூறுகிறார். துரித மற்றும் மின்வா்த்தகத்தில் அதிக கவனம் இந்த முறை செலுத்தியுள்ளதாகவும், பண்டிகைகால தேவைகள் அதிகரித்துள்ளதாகவும் மனிஷ் அகர்வால் கூறுகிறார். துரித வணிகத்தில் அதிக கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் துரிதமான டெலிவரி தேவைப்படுவதாகவும் அகர்வால் குறிப்பிட்டார். பெரிய அளவில் தேவை இருந்தாலும் அதற்கு நிகராக பணவீக்கமும் இருப்பதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. செப்டம்பர் மாத தகவலின்படி கிராமபுற பணவீக்க உயர்வு 5.9 விழுக்காடாக இருக்கிறது. இதில் குறிப்பாக உணவுப்பொருட்கள் பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட்டில் 5.3விழுக்காடாக இருந்த உணவுப்பொருட்கள் விலையேற்றம், செப்டம்பரில் 8.4விழுக்காடாக உயர்ந்துள்ளது. சிறுநகரங்களில்தான் மக்கள் அதிகம் செலவு செய்வதாகவும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது.