சென்னை ஆலையை மாற்றி பயன்படுத்தும் ஃபோர்டு..

பிரபல ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் தனது சென்னை ஆலையை மீண்டும் பயன்படுத்த முடிவெடுத்துள்ளது. ஆனால் இந்த முறை கார்களுக்கு பதிலாக இன்ஜின்களை மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் தயாராகும் இன்ஜின்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வாகன உற்பத்தியை நிறுத்திய ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவை விட்டே வெளியேறியது. மறைமலைநகரில் கடந்த 2022 முதல் அப்படியே கிடக்கும் ஆலையை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளுடனும் ஃபோர்ட் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்றுமதி தொடர்பான திட்டங்கள் முக்கியமான கட்டங்களை எட்டியுள்ளதாகவும், இது தொடர்பாக அறிவிப்பு அதிகாரபூர்வமாக வரும் என்றும் கூறியிருந்தார். என்டேவர், எவரஸ்ட், மஸ்டாங் ரக கார்களில் மின்சார கார் வசதியை செய்ய ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டங்கள் கைவிடப்படலாம் என்று கூறப்படுகிறது. டீலர்ஷிப் ஒப்பந்தங்களை முற்றிலும் முறித்துக்கொண்ட ஃபோர்ட் நிறுவனம், சர்வீஸ் சென்டர்களை மட்டும் வைத்திருந்தது. தற்போது வெறும் ஏற்றுமதியை மட்டுமே ஃபோர்ட் நிறுவனம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.