சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும், வலியையும் அனுபவித்திருக்கிறேன் – மன்மோகன் சிங்
மிகவும் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை இந்தியா போற்றி பாதுக்காக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா, விரைவில் பூமியில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் எனவே, இந்த 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் அனைவரின் சுதந்திரமும் பாதுக்காப்பட வேண்டும் என்ற குறிக்கோளையும் பொறுப்பையும் இந்த சுதந்திர தினம் முன் நிறுத்துகிறது என்றும் கூறியுள்ளார். காலனித்துவ ஆட்சியிலிருந்து வெளி வந்தது, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஏராளமான பகுதிகள் மற்றும் சமஸ்தானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்தியா உருவானது. இந்த ஒற்றுமை, ஒரே இரவில் நடந்தது அல்ல. தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் முன்னெடுப்பும், உழைப்பால் மட்டுமே இந்த சுதந்திரம் சாத்தியம் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார்.
பொருளாதார மாற்றங்கள்
காலனித்துவ ஆட்சியின் போது, இந்தியாவின் வளங்கள் மற்றும் சொத்துக்கள் திருடப்பட்டு, பின்னர் சுதந்திரத்திற்கு பிறகு, நாம் ஒரு வளரும் ஏழை நாடு என்ற நிலையில் தான் இருந்தோம். அந்த நிலையில் இருந்து தற்போது, உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நாடாக நாம் வளர்ந்து உள்ளோம். 1991ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார மாற்றங்கள் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக அமைந்தது.
அதே நேரத்தில், வறுமையைக் குறைப்பது நாட்டின் மிக முக்கியக் கொள்கையாக இருக்கிறது. அதே சமயம், நாட்டின் மொத்த வளத்தையும், நன்மைகளையும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மட்டும் அனுபவிக்கும் வண்ணம் இருக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்றும் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஆராய்ச்சி நிறுவனங்கள்
அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர ஆண்டை எட்டும் முன்னர், இந்திய இளைஞர்களின் சக்தியை கல்வி, சுயதொழில் போன்ற பல்வேறு துறைகளில் உயர்த்த வேண்டும். இந்தியா சுதந்திர பெற்ற நாட்களில் இருந்தே, அறிவியல் தொடர்பான விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதுவும் எதிர்காலத்தை மனதில் வைத்து செய்யப்படுகிறது. அதன் காரணமாகத் தான் இந்தியாவில் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாகி உள்ளன.
ஊட்டச்சத்து பற்றாகுறை
தற்போதைய நிலையில், இந்தியாவில் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு என பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. இந்தியாவில் ரத்த சோகை, ஊட்டச்சத்து பற்றாகுறை இன்னும் பெரிய அளவில் தொடர்கிறது. கொரொனா வந்த போது, இந்தியாவின் சுகாதார கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிந்தது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான, சிறப்பான மருத்துவம் கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மிகவும் முக்கியம்.
மகிழ்ச்சியும் வலியும்
இந்தியா சுதந்திரம் அடைந்தது என்றும் போது, தனக்கு 14 வயது தான் ஆகி இருந்தது என்றும், அப்போது, இந்தியா பெற்ற சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும், அதனால் ஏற்பட்ட துயரமான நிகழ்வுகளின் வலியையும் ஒரு சேர அனுபவித்துள்ளதாக மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியா வரும் காலங்களில் மேலும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறி உள்ள அவர், மத ரீதியான சர்ச்சைகள், இன ரீதியான மோதல்கள் இந்தியாவின் ஒற்றுமையை பிரித்து மக்களிடைய பிளவை கொண்டு வருவது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். எனவே இந்திய குடிமக்கள், நாம் மிக கடினமாக பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க முன் வர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.