34,574 கோடி ரூபாயை வெளியே எடுத்த முதலீட்டாளர்கள்..

கடந்த பிப்ரவரியில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 34 ஆயிரத்து 574 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈக்விட்டியில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். அதே நேரம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 1.12லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகளை அவர்கள் எடுத்துள்ளனர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் , இந்திய ஈக்விட்டி சந்தைகள் அதிக மதிப்பு கொண்டதாகவும் இருப்பதால் இந்த வெளியேற்றம் நடந்து வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். ஜனவரியில் மட்டும் 78 ஆயிரத்து 27 கோடி ரூபாயை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து எடுத்துள்ளனர். இந்தாண்டில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 6 விழுக்காடு வரை குறைந்துள்ளதே இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. நிதித்துறையில் இருந்துதான் ஏராளமான முதலீடுகளை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். கடன் சந்தையில் இருந்து 8,932 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. கடந்த 2024-ல் மட்டும் வெளிநாட்டு முதலீடுகள் 427 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளன. 1.71 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் கடந்த 2023-ல் இந்தியாவில் முதலீடு செய்தனர். இந்திய பொருளாதாரம் வேகமாக வளரும் என்ற நம்பிக்கையால் கடந்த 2023-ல் அதிக முதலீடுகள் குவிந்தன. ஆனால் தற்போது பொருளாதாரத்தின் நிலை சற்று கவலை அளிக்கும் வகையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் வெளியேறியிருக்கின்றனர்.