உலக பங்குச்சந்தைகளை அதிர வைக்கப்போகும் வெள்ளிக்கிழமை..
அமெரிக்காவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி,கடன்கள் மீதான வட்டியை உச்சத்திலேயே வைத்துள்ளது. இந்நிலையில் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து வரும் 17,18 ஆம் தேதிகளில் நடக்கும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது. ஆனால் அது வெறும் கூட்டமாக மட்டுமே இருக்கும். ஏனெனில் வரும் வெள்ளக்கிழமை ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க வேலைவாய்ப்பு விகிதம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாக இருக்கிறது.கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அளவு என்பது 4.3%ஆகவே இருந்தது. இந்த சூழலில் கடந்த மாதத்தின் நிலை என்ன என்பதை அறிவித்த பிறகே ஃபெடரல் ரிசர்வ் வங்கி இறுதி முடிவை எடுக்க இருக்கிறது. இதனால் அனைத்து தரப்பினரும், அமெரிக்க வேலைவாய்ப்பு தகவல்களை எதிர்நோக்கி இருக்கின்றனர். 1.25லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருந்தால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.3 விழுக்காடாகவே இருக்கும், அதைவிட குறைந்தால் டாலர்கள் மதிப்பு குறையும், தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் குறைத்தால் அதனால் பெரிய தாக்கம் இருக்காது. அதே நேரம் 50 புள்ளிகள் குறைத்தால் அது நிச்சயம் உலக பொருளாதாரத்தையே அசைத்துப்பார்க்கும். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள டெக் நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களை நம்பியே வணிகம் செய்கின்றனர். பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்தால் அது டிசிஎஸ் போன்ற டெக்நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்க இருக்கிறது. அமெரிக்காவில் கடன்கள் மீதான வட்டி குறைக்கப்படும்பட்சத்தில் அந்நாட்டு பத்திரங்களின் மதிப்பு பல மடங்கு உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்புத் தகவல்கள் பங்குச்சந்தைகளின் போக்கை மாற்றியமைக்கும் நிகழ்வாக மீண்டும் அமைந்திருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.