ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு தடை..

ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதியை தவறாக கையாண்ட புகாரில் இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது. புரமோட்டர்களாக இருக்கும் நபர்கள் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியிலும் இருக்கக் கூடாது என்றும் செபி காட்டமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்து அறிவிப்பு வரும் வரை ஜென்சோல் நிறுவனம் வணிகத்தை தொடரக்கூடாது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பங்கு மதிப்பு தவறாக கணக்கிடப்படுவதாகவும், கடன்களை திரும்ப செலுத்தாத புகார்களும் ஜென்சோல் நிறுவனத்தின் மீது குவிந்தன. இதையடுத்து, விசாரணையில் இறங்கிய செபி புதிய உத்தரவை வெளியிட்டது. IREDA, PFC உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து கடன் பெற்ற ஜென்சோல் நிறுவனம், 975 கோடி ரூபாயில் மின்சார வாகனங்கள் வாங்கப்போவதாக தெரிவித்தனர். ஆனால் மின்சார வாகனங்கள் வாங்க பெற்ற கடனை மிகக்குறைந்த அளவிலேயே வாங்கியுள்ளதாக கூறியுள்ள இந்த நிறுவனம், செபியின் விசாரணையில் சிக்கியது. கார் வாங்குவதாக பெறப்பட்ட நிதி, புரமோட்டர்களின்சொந்த செலவுக்காகவும், ரியல் எஸ்டேட் முதலீடுகளும் செய்யப்பட்டுள்ளதாக செபி காட்டமாக தெரிவித்துள்ளது. மோசடியான சில ஆவணங்களை ஜென்சோல் நிறுவனம் சமர்பித்து கடன்களை திருப்பி செலுத்தியதுபோல மோசடி நடந்துள்ளதாகவும் செபி கூறியுள்ளது. மூலதன சந்தையில் முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள செபி, அடுத்த அறிவிப்பு வரும்வரை வணிகத்தை நிறுத்த ஆணையிட்டுள்ளது. ஜென்சோல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சியாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2017 நிதியாண்டில் வெறும் 61 கோடிரூபாயாக இருந்த நிறுவனத்தின் விற்பனை, 2024ஆம் ஆண்டு 1152 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாபம் வெறும் 2 கோடி ரூபாயில் இருந்து தற்போது 209 கோடி ரூபாயாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கம் முதல் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பங்குகள் 83 விழுக்காடு வரை சரிந்தன. செவ்வாய்க்கிழமை மட்டும் அந்நிறுவனத்தின் பங்குகள் 3 விழுக்காடு விலை குறைந்து ஒரு பங்கின் விலை 129 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.