வருகிறது உலகளாவிய மந்தநிலை:எச்சரிக்கும் ஐ.எம்.எஃப்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் அடுத்தாண்டு உலகளாவிய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதை சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எஃப் கணித்துள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வாரம் வெளியாக உள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தற்போதுள்ள மந்த நிலை தொடர்ந்தால் வரும் 2026ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரம் 4 டிரில்லியன் அளவுக்கு சரியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அளவு ஜெர்மனியின் மொத்த பொருளாதாரத்துக்கு நிகரானது என்றும் கிறிஸ்டாலினா தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தில் 3-ல் ஒரு பங்கு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், மந்த நிலை வரும் 8 மாதங்கள் அல்லது அடுத்தாண்டு நிச்சயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பெருந்தொற்று,போர் உள்ளிட்ட காரணிகளால் அடுத்தடுத்து நிதிநிலைகளில் பல அதிர்ச்சிகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று முடிந்து பொருளாதாரம் மீண்டெழும் என ஐஎம்எஃப் கடந்த 2021-ல் கணித்திருந்தது, அதன்படியே பொருளாதாரமும் வளர்ந்து வந்தது. ஆனால் அர்த்தமற்ற முறையில் நடக்கும் ரஷ்யா உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் விலையேற்றம், உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் கடுமையான நிதிநிலைகள் வளர்ச்சியை குறைத்து மந்தநிலைக்கு வித்திட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்கள் எவ்வளவு நிதிநிலையை சமாளிக்க முடியும் என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தபடி திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் ஐஎம்எப் கூறியுள்ளது.
உலகில் உள்ள குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் 60 %நாடுகளை கடன் சுமை ஆட்டிப்படைப்பதாக கூறியுள்ளது ஐஎம்எஃப்.