கோ பிராண்ட் கிரிடிட் கார்டு-ரிசர்வ் வங்கி கடிவாளம்..
இந்தியாவில் அசுர வேகம் வளர்ந்து வரும் கோ பிராண்டு கிரிடிட் கார்டுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்து உள்ளது. இது போல கிரிடிட் கார்டுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதிப்பது முதன் முறையல்ல.அதாவது நேரடியாகவே ஒரு நிறுவனத்தின் பிராண்டுகளை பயன்படுத்த வேண்டுமே தவிர்த்து மறைமுகமாக பின்வாசல் வழியாக இறங்கக் கூடாது என்று மத்திய வங்கி திட்டவட்டமாக கூறியுள்ளது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் இது மாதிரியான கிரிடிட் கார்டுகளை விற்க கடும் போட்டி போட்டு வரும் நிலையில், சில வங்கிகளுக்கு மட்டுமே நேரடி அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆகவே நேரடியாக பிராண்டுகள் வளர வேண்டுமே தவிர்த்து மறைமுகமாக நடக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. பணப்பரிவர்த்தனை விவரங்கள் கோ பிராண்டிங் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக கூறியுள்ளது. அதேபோல் விசா,மாஸ்டர் கார்டு,அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையே கார்டு சேவையை மாற்றிக்கொள்ளும் வசதியையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கிரிடிட் கார்டு மூலம் பரிவர்த்தனைகள் செய்யும் அளவு ஒரு மாதத்துக்கு 30ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது. தற்போது அவை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி நிலவரப்படி ஸ்விக்கி நிறுவனம் எச்டிஎப்சி வங்கி மூலம் ஒரு லட்சத்து 20,000 கிரிடிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளன, இதேபோல் டாடா நியூ கார்டும் சுமார் 10 லட்சம் கார்டுகளை விநியோகித்தன. இதேபோல் ஐசிஐசிஐ நிறுவனமும் அமேசானுடன் இணைந்து 40லட்சத்து 70 ஆயிரம் கார்டுகளை விநியோகித்து உள்ளன. இந்தியாவில் மொத்த கிரிடிட் கார்டுகளின் எண்ணிக்கை 9 கோடியே 95 லட்சமாக இருக்கிறது.இதே எண்ணிக்கை கடந்த 2022-ல் வெறும் 7 கோடியாக இருந்தது. கிரிடிட் கார்டு நிலுவைத் தொகை மட்டும் 2.5லட்சம் கோடிஆக உயர்ந்திருக்கிறது. ஓராண்டுக்கு முன்பு இது வெறும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. டிஜிட்டல் முறையில் கடன் வழங்குதல் மற்றும் பேமண்ட் பிரிவில் ஏற்பட்ட மாறுதல்களை கருத்தில் கொண்டுதான் ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.