7 மாதங்களில் 50% உயர்ந்த தங்க நகைக்கடன்..
நடப்பு நிதியாண்டில் வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து பணமாக வாங்கும் போக்கு கடந்த 7 மாதங்களில் 50.4% உயர்ந்திருக்கிறது. தனிநபர் கடன்கள் குறைவாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. வங்கிக்கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு புள்ளி விவரத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதியுடன் தங்க நகைக்கடன்கள் மதிப்பு 1.54லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த மார்ச் மாதம் 1.02லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி என்பது 56%ஆக உள்ளது. இதேபோல் கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் 13% அதிகமாகும்.. தங்க நகை அடகுகடன் அதிகரிக்க ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கைகளே காரணம் என்று கூறப்படுகிறது. நிதி நிறுவனங்கள் பாதுகாப்பான கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் விலையும், தங்கத்தை அடகு வைத்து பணம் வாங்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் தங்க அடகு கடன்கள், நிதி சிக்கலின் முக்கிய அறிகுறி என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்க நகைக்கடன் திட்டங்கள் தொடர்பாக உள்ள குளறுபடிகளை 3 மாதங்களில் சரி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி, தனியார் நிதி நிறுவனங்களை அறிவுறுத்தியது. சில நிறுவனங்கள் இதில் முறையற்ற செயல்களில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்வதாகவும் ரிசர்வ் வங்கி அதிருப்தி தெரிவித்திருந்தது.
தனிநபர் கடன் பிரிவில், ஆண்டுக்கு ஆண்டு வீட்டுக்கடன் பிரிவில் வளர்ச்சி 5.6% உள்ளது. வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவோரின் மதிப்பு 28.7லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியில் இது 12.1%அதிகமாகும், கடந்தாண்டு அக்டோபரை ஒப்பிடும்போது இது 36.6% வளர்ச்சியாகும். கிரிடிட் கார்டுகளின் வளர்ச்சி 9.2%அதிகரித்துள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரிப்பே கிரிடிட் கார்டு கடன்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாதுகாப்பற்ற கடன்கள் விகிதம் 3.3%ஆக உயர்ந்துள்ளது. வங்கி கடன் விகிதம் 4.9% உயர்ந்து 172.4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிறுவனங்களுக்கு அளிக்கும் கடன் விகிதமும் 3.3%உயர்ந்துள்ளது.