வீடுகள் விலை 7 %உயரப்போகுதாம் உஷார் மக்களே..
இந்தியாவில் வீடுகளின் விலை 7 விழுக்காடு வரை இந்தாண்டும் அடுத்த ஆண்டும் உயரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது.
ஆனால் இதில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. அதாவது சாதாரண பொதுமக்கள் வாங்கும் வீடுகளின் விலை பெரிய அளவில் மாறப்போவது கிடையாதாம், மாறாக உயர் ரக சொகுசு வீடுகள் விலை உயரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 2022 முதல் பிப்ரவரி 2023 வரை ரிசர்வ் வங்கி உயர்த்திய கடன்களின் வட்டி விகிதம் காரணமாக வீட்டுக்கடன்களின் வட்டியும் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு வீடுகளின் பொருட்கள் விலை 4.3 விழுக்காடு வரை உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வாகும். ஏற்கனவே வறுமையில் உள்ளோர் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பெரிய மாற்றங்கள் இருக்கப்போவதில்லை என்றும் அந்த கணிப்பு தெரிவிக்கிறது. 13 ரியல் எஸ்டேட் சந்தை நிபுணர்களிடம் சேர்த்து நடத்திய ஆய்வில் இந்தாண்டும் அடுத்தாண்டும் இந்தியாவில் சொகுசு வீடுகளின் விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் அதிகரிப்பதால் சொகுசு வீடுகளுக்குத்தான் அதிக மவுசு இருக்கிறதாம். கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் துறையில் வீடுகள் உயர்த்தப்படுகின்றன. முதல் முறை வீடு வாங்குவோரின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும் அந்த கணிப்பு கூறுகிறது. இந்தாண்டு வட்டி விகிதம் குறையும் என்றும்,மும்பை, டெல்லி, பெங்களூருவில் வீடுகளின் விலை முறையே 6, 5 மற்றும் 9 விழுக்காடு அளவுக்கு உயரும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.