டாடா மோட்டார்ஸின் கர்ஜனை..
மின்சார கார்கள் இயங்குவது சாலையில் செல்லும் பலருக்கு தெரிவதே இல்லை என்ற அளவுக்கு அத்தனை அமைதியாக கார்கள் செல்கின்றன. சில நேரங்களில் பாதசாரிகள்,சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கும் அளவுக்கு மின்சார கார்கள் அவ்வளவு அமைதியாக இருக்கின்றன. இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 7 ஆம் தேதி கர்வ் என்ற மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அவாஸ் என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோரை இந்த நுட்பம் எச்சரிக்கிறது. கர்ஜனை சத்தத்துக்காகவே பலரும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்குகின்றனர். இந்நிலையில் அது போன்ற ஒரு கர்ஜனை சத்தத்தை டாடா கர்வில் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மின்சார கார்களில் டாடா கார்களின் விகிதம் மட்டும் 67 விழுக்காடாகும். வழக்கமான எரிபொருள் இன்ஜின்களில் வரும் சத்தமோ, வாயுக்களோ, மின்சார கார்களில் இருக்காது. சாலையில் செல்வோரை எச்சரிக்கும் வகையில் அவாஸ் என்ற புதிய நுட்பத்தின்படி, சாலையை கடக்கும்போது மக்களை எச்சரிக்கும் சப்தம் வர இருக்கிறது. பெட்ரோல், டீசல் இன்ஜின்களில் கியர் மாற்றும் வசதியும் மின்சார கார்களில் இல்லை என்பதால் பல ஓட்டுநர்கள் மன ரீதியில் இதற்கு தயாராகி வருகின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இசை தயாரிப்பாளர் கல்மி என்பவருடன் இணைந்து அவாஸ் நுட்பம் இயக்கப்படுகிறது. மணிக்கு 20 கிலோமீட்டர் வேகம் செல்லும் வாகனங்களுக்கு இந்த நுட்பம் உதவும் வகையில் சப்தம் எழுப்பப்படுகிறது. 20 கிலோமீட்டருக்கு அதிகமான வேகம் சென்றால் டயரின் சத்தம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவை காரணமாக வாகனங்கள் மிகவும் உயர்ந்த ஒலி எழுப்பும். நெடுந்தூர பயணம் மற்றும் வேகமாக கார்களை இயக்குவோருக்கு கர்ஜிக்கும் சத்தம் பிடிக்கும். அவர்களுக்காகவே புதுப்புது வடிவங்களில் கார்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன