நம்பிக்கை இழக்கும் ஹைப்ரிட் கார் உற்பத்தியாளர்கள்..
வரும் நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் பல்வேறு எதிர்பார்ப்புகளை சுமந்துள்ளது.
வரும் பட்ஜெட்டில் ஹைப்ரிட் கார்களுக்கான வரி சலுகை கிடைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தும் FAME என்ற திட்டத்தின் மூலம் கட்டண சலுகைகள் கிடைத்து வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் தற்போது அமலில் உள்ளது. இதன்படி ஹைப்ரிட் மற்றும் மின்சார கார்களுக்கு தற்போது சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனை குறைப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்து கனரக தொழிற்சாலைகள் அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் FAME-3திட்டத்தில் வெறும் 12,000 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் இரண்டு நகரங்களை இணைக்கும் புகையில்லா பேருந்துகளுக்கு கூடுதல் நிதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் மின்சார லாரிகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரம் மின்சார வாகனங்களை ஒப்பிடுகையில் ஹைப்ரிட் ரக வாகனங்களுக்கு மானியம் சலுகை குறையும் என்றே தெரிகிறது. தற்போது வரை பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 5 விழுக்காடு ஜிஎஸ்டியும், ஹைப்ரிட் வகை மற்றும் எண்ணெயில் இயங்கும் வாகனங்களுக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் தங்களுக்கு அரசு உதவும் என்று நம்பிக்கை உள்ளதாக டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆட்டோ மொபைல் துறையில் மக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வரிகள் அதிகம் இருந்தாலும் மக்கள் அதிகம் வாங்குவார்கள் என்பதே நிபுணர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனினும் வரி குறைப்புக்கான வாய்ப்புகளும் மங்கி வருவதால் அதற்கும் ஹைப்ரிட் வகை வாகனங்கள் தயாராகி வருகின்றனர்.