வரும் 14 ஆம் தேதி வருகிறது ஹியூண்டாய் IPO..
இந்தியாவில் அதிக கார்களை உற்பத்தி செய்து விற்கும் முதல் 3 நிறுவனங்களில் ஒன்றாக ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம் தனது வணிகத்தை மேலும் அதிகரிக்க 25,000 கோடி ரூபாய் நிதியை ஆரம்ப பங்கு வெளியீட்டில் வசூலிக்கவும் முடிவெடுத்துள்ளது. வரும் 14 ஆம் தேதி இந்த ஆரம்ப பங்குகள் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இந்த அறிவிப்பு மாறியுள்ளது. இதற்கு முன்பு 21,000 கோடி ரூபாய் வசூலித்த எல்ஐசியின் ஐபிஓதான் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஹியூண்டாய் உடைக்க இருக்கிறது. 14.21 கோடி பங்குகளை விற்றும் முதலீடுகள் ஈர்க்கப்படுகின்றன. வழக்கமான ஆரம்ப பங்குகள் போல இல்லாமல் முழுக்க முழுக்க நிறுவனத்தின் பங்குகளை விற்று அதன் மூலம் முதலீடுகளை இந்த ஐபிஓ ஈர்க்க இருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி செபியின் உத்தரவையும் இந்த நிறுவனம் பெற்றிருந்தது. 1996 ஆம் ஆண்டு இந்தியாவில் தனது பணிகளை தொடங்கிய ஹியூண்டாய் நிறுவனம், இந்தியாவில் நிகர லாபமாக 4,382 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஹியூண்டாயின் லீட் மேலாளர்களாக கோடக் மகிந்திரா கேபிடல் கம்பெனி, சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், எச்எஸ்பிசி, ஜே.பி. மார்கன்இந்தியா, மார்கன் ஸ்டான்லி இந்தியா கம்பெனி பிரைவேட் லிமிட்டட் உள்ளிட்ட நிறுவனங்களும், KFin டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் முக்கியமான பதிவாளராகவும் திகழ்கின்றனர்.