2 கோடி மதிப்பு பங்குகளை பரிசளித்த சிஇஓ
ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ள வைத்தியநாதன் வங்கித்துறையில் மிகவும் பிரபலமானவர். தாம் கஷ்டத்தில் இருந்தபோது உதவியவர்களை தேடித் தேடி சென்று தற்போது உதவி செய்து வருகிறார். இவர் அண்மையில் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 லட்சம் பங்குகளை 5 பேருக்கு தானமாக அளித்திருக்கிறார். 50,000 பங்குகளை ஒருவருக்கும், 75ஆயிரம் பங்குகளை மற்றொருவருக்கும், 2.5 லட்சம் பங்குகளை முன்னாள் விமானப்படை வீரர் சம்பத் குமாருக்கும் அளித்து வியக்க வைத்திருக்கிறார். வறுமையில் இருந்த காலத்தில் சம்பத் குமார் வைத்தியநாதனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். அந்நிலையில் விமானப்படை அதிகாரி நலிவுற்றிருப்பதாக தெரிந்துகொண்ட வைத்தியநாதன், அவரை தேடிக் கண்டுபிடித்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கள் நிறுவன பங்குகளை அளித்திருக்கிறார். மேலும் குமாரின் மருத்துவ செலவுக்காக இந்த பங்குகளை அளித்திருக்கிறார். மேலும் தனது நண்பர்கள் இருவர் வீடு கட்டுவதற்காக இரண்டே முக்கால் லட்சம் பங்குகளை அவர் அளித்திருக்கிறார். 5 பேருக்கும் அளித்திருக்கும் பரிசுகளின் மதிப்பு மட்டும் 5.45 கோடி ரூபாய் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வங்கியில் 1 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் வைத்தியநாதன், இதுவரை தனது நண்பர்களுக்காக 80 கோடி ரூபாய் பரிசளித்திருக்கிறார். கடந்த 2022-லும் இதே பாணியில் 9 லட்சம் பங்குகளை 3..95 கோடி ரூபாய் அளவுக்கு 5 பேருக்கு அவர் தானமாக அளித்திருக்கிறார்.
வைத்தியநாதன் கஷ்டத்தில் இருந்தபோது அவரின் கணக்கு டீச்சர் 500 ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார். அதனை ஞாபகம் வைத்து கடந்த 2020ஆம் ஆண்டில் பெரும்தொகையை கணக்கு டீச்சருக்கு பரிசாக வைத்தியநாதன் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தன் வசம் இருக்கும் பங்கில் 40 விழுக்காடு வரை மற்றவர்களுக்கு வைத்தியநாதன் அளித்திருக்கிறார். கொடுப்பதற்கும் ஒரு மனசு வேணும் தானே..பாராட்டலாம்..