இடைக்கால பட்ஜெட்டில் முக்கியமானவை..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 6 ஆவது முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதத்தில் புதிய அரசு அமைந்ததும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும். உள்கட்டமைப்பு, விவசாயத்துறை,பசுமை ஆற்றல்துறை, ரயில்வே துறைகளில் கூடுதல் அறிவிப்புகள் இடம்பிடித்துள்ளன. பெரிதாக எந்த வரி சலுகைகளும் இல்லாதது பொதுமக்களையும், சம்பளம் வாங்குவோரையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நல்ல முறையில் நாடு உருமாற்றம் பெற்றுள்ளதாகவும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். அடுத்த 5 ஆண்டுகள் முக்கியமானவை என்று குறிப்பிட்ட அவர், சுற்றுலாதுறை, ஆராய்ச்சித்துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். வருமான வரிச்சலுகையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக ஆகியுள்ளதாக கூறினார். வருமான வரி ரிட்டர்ன்ஸ் பெற 10 நாட்களே போதும் என்ற வகையில் செயல்கள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உள்கட்டமைப்புக்கு அதிக கவனம் தரப்பட்டுள்ளது. ரயில்வேயில் 40 ஆயிரம் சாதாரண பெட்டிகள் வந்தே பாரத் ரயில்களாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில், நமோ பாரத் ரயில்கள் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். லக்பதி திதி திட்டம்: 83லட்சம் சுய உதவிக்குழுக்களில் 9 கோடி பெண்களின் சமூக பொருளாதார நிலை மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கிராமபுற பெண்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1 கோடி இந்தியர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் சோலார் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல்,மின்சார வாகனங்கள்,சுற்றுலா துறைகளுக்கும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2014 முதல் 2023 வரை மட்டும் அந்நிய நேரடி முதலீடுகள் 596 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில் நுட்ப வசதிகளுக்காக வட்டி இல்லா கடன்கள் அளிக்கும் திட்டங்கள் அறிமுகப்படத்தப்படும் என்று குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் வீடுகட்டும் திட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாய மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் 38 லட்சம் விவசாயிகள் உதவியுடன் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.