15லட்சம் வரை ஐ.டி. இல்லையா?

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் வரும் பட்ஜெட்டில் சில சலுகைகளை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரிச்சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த தகவல் உறுதியானால் லட்சக்கணக்கான நடுத்தர மக்கள் பயனடைவர், நகரங்களில் வசிப்போருக்கு இது பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அண்மையில் புதிய வரி செலுத்தும் முறையும் 5 முதல் 20 விழுக்காடு வரை வரி செலுத்தும் திட்டமும், உச்சபட்சமாக 30% வரை வரி செலுத்தும் திட்டமும் உள்ளது. வரிச்சலுகை விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வரிச்சலுகை அளிக்கப்பட்டால் அரசுக்கு பெரிய நிதி இழப்பீடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 1 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் பெறுவோரிடம் இருந்து 30% தொகை வரியாக அரசு பிடித்து வருகிறது. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால் பொருளாதாரமும் மீண்டு வரும் என்ற நம்பிக்கை மத்திய அரசிடம் உள்ளது. உலகின் 5 ஆவது பெரிய பொருளாதார நாடான இந்தியா கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மிகவும் மெதுவாக வளர்ச்சியை கண்டுள்ளது. அதிக பணவீக்கம் இதற்கு முக்கிய காரணியாக கூறப்படுகிறது. சோப்பு முதல் உணவுப் பொருட்கள் வரை ஷாம்புகள், கார், இருசக்கர வாகனங்கள் விலை அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் நகரங்களில் பெரியளவில் காணப்படுகிறது. அதிக வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. விலைவாசியை சமாளிக்க முடியவில்லை என்று பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் சலுகைகள் வருமா என மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.