இந்திய காருக்கு ஜப்பானில் வரவேற்பு..
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசுக்கியின் ஃபிராங்ஸ் ரக கார் ஜப்பானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே மேட் இன் இந்தியா என்ற அடைமொழியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வகை கார்கள் குஜராத் மாநிலத்தில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதல் கட்டமாக பிப்பவாவ் துறைமுகத்தில் இருந்து ஜப்பானுக்கு ஆயிரத்து 600 கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு மாருதி நிறுவனத்தின் பலேனோ கார்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில் பிராங்க்ஸ் ரக கார்கள் ஜப்பானுக்கு செல்லும் இரண்டாவது ரக கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் ஃபிராங்ஸ் ரக கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அறிமுகப்படுத்தப்பட்ட 10 மாதங்களுக்குள்ளேயே இந்த ரக கார்கள் 1லட்சம் யூனிட்டுகள் இந்தியாவில் விற்றுத்தீர்ந்துவிட்டன. கடந்த ஜூலை மாதம் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆஃப்ரிக்கா இந்த ரக கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுவரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிகளை சேர்த்து 2 லட்சம் கார்கள் விற்கப்பட்டுள்ளன. 2024 நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 2.8லட்சம் கார்களை மாருதி சுசுகி நிறுவனம் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. 42%விழுக்காடு வருவாய் கார்கள் ஏற்றுமதியிலேயே கிடைக்கின்றன. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 70,560 கார்களை மாருதி சுசுகி நிறுவனம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக்கிறது. இது அந்நிறுவன வரலாற்றில் முதல் முறை அதிக விற்பனையாகும் காலாண்டாக அமைந்துள்ளது.