இ-பைக் விற்பனையில் போட்டா போட்டி..

இந்தியாவில் இ-பைக் விற்பனையில் நவம்பர் மாதத்தில் கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.10லட்சம் இ பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ஓலா நிறுவன பைக்குகள்தான் 27,746 பைக்குகளை விற்றுள்ளது. இதேபோல் டிவிஎஸ் பைக்குகள் 26,036 பைக்குகளும், பஜாஜ் ஆட்டோக்கள் 24,978 பைக்குகளும் விற்கப்பட்டுள்ளன. அதேநேரம் அக்டோபரை ஒப்பிடும்போது ஓலா மின்சார பைக்கின் விற்பனை 40 விழுக்காடு குறைந்து 27,746 ஆக சரிந்துள்ளது. இந்தாண்டில் மட்டும் ஓலா நிறுவனத்தின் மின்சார பைக்குகள் 3லட்சத்து 92 ஆயிரத்து 176 இ-பைக்குகளை விற்றுள்ளனர். இது சந்தையில் 37% அளவாகும். டிவிஎஸ் நிறுவனம் இந்தாண்டில் 2லட்சத்து 1ஆயிரத்து 966 வாகனங்களை விற்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பஜாஜ் 1.73லட்சம், ஏத்தர் நிறுவனம் 1லட்சம் பைக்குகளை விற்று, சந்தையில் 11%பங்குகளை வைத்துள்ளனர். 2024-ல் ஓலாவின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும், சந்தை மதிப்பு குறைந்துவிட்டது. அக்டோபரில் இந்த நிறுவனத்தின் விற்பனை 31% வரை உயர்ந்திருந்தது. பண்டிகை காலம் என்பதால் ஓலா நிறுவனத்தின் விற்பனையும் அமோகமாக இருந்தது. நவம்பர் மாத புள்ளிவிவரத்தை பார்த்தால்,மின்சார வாகன விற்பனையில் ஓலாவுக்கு போட்டியாக டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோவும் அடுத்தடுத்த இடங்களில் மிக நெருக்கமான போட்டியில் இருப்பது உறுதியாகியுள்ளது. அடுத்தாண்டும் இந்த போட்டி மிகக்கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நவம்பர் மாத இறுதிக்குள் 10லட்சத்து 3 ஆயிரம் இ-பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதத்தில்தான் முதல் முறையாக 10லட்சம் என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளது.