இறக்குமதி வரி குறையுமா?
இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் இறக்குமதி வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், இந்தியா தான் அதிக வரிகளை வசூலிப்பதாக கேலி செய்திருந்தார். இது பற்றி இந்திய நிதியமைச்சரிடம் கேட்டபோது, இந்திய நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்றார். இந்தியாவின் உற்பத்தி திறன் பாதிக்காத வகையில் இறக்குமதி இருக்க வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்கா-இந்தியா இருநாடுகளுக்கு இடையே கடந்த நதியாண்டில் 119.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் நடந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்கு உயர்வாகும். இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக இடைவெளி அகலமாகிக்கொண்டே செல்லும் நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், வகுக்ககப் போகும் திட்டங்களால் இந்தியாவுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அதிபராகும் டிரம்ப்பால் இந்தியாவின் ஐடி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே நேரம் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் எடுக்கும்பட்சத்தில் அது நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய பலமாக அமையும். கடந்த 2017 முதல் 2021 வரையிலான முதல் ஆட்சியில் இந்தியாவை வரி வசூலிப்பதில் மன்னர்கள் என்று விமர்சித்து சில பொருட்களுக்கு தடைவிதித்தார். பதிலுக்கு இந்திய அரசும் பெரிய வரிகளை அமெரிக்க நிறுவனங்களுக்கு விதித்தது. நிலைமை இப்படி இருந்ததால் கடந்த 2019-ல் ஸ்டீல் மற்றும் அலுமீனியம் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக பதவியேற்கப்போகும் டிரம்ப், அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழும்ப வைத்துள்ளார்.