இந்த விஷயத்துல இந்தியா கவனம் செலுத்தல..
இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு மிகப்பெரிய ரிஸ்காக மாறும் என்று இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோத்திலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாராயணமூர்த்தி,மக்கள் தொகை அதிகரிப்பு அலட்சியப் படுத்தப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் எதிர்காலத்துக்கு பெரிய அச்சுறுத்தல் என்றும் கூறியுள்ளார். இந்தியாவின் தனிநபர் வருமானம், நில கையிருப்பு, சுகாதார வசதி ஆகியவற்றில் பெரிய சவால்கள் உள்ளதாக குறிப்பிட்டார். அமெரிக்கா, பிரேசில். சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவை அவர் ஒப்பிட்டார். அவசர நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு இந்தியர்கள் மக்கள் தொகையைபற்றி அக்கறை கொள்ளவில்லை என்று சாடிய அவர், இதனால் இந்தியா தற்சார்பு இல்லாமல் போய்விடும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசில், சீனாவில் நம்மை விட அதிக வருவாயும், நிலமும் மக்களிடம் இருப்பதாக அவர் ஒப்பிட்டார். ஏற்கனவே சீனா உலகின் தொழிற்சாலையாக விளங்கி வருவதாகவும் புகழ்ந்த அவர், நம்மைவிட சீனா 6 மடங்கு ஜிடிபிவைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். உற்பத்தி சார்ந்த துறைகளில் நாம் பின்தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும், அதனை ஊக்குவிப்பது அரசின் கைகளில்தான் இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிப்படைத்தன்மை, வேகம், ஆகியவை பொது நிர்வாகத்தில் இன்னும் மேம்படவேண்டும் என்றும் நாராயண மூர்த்தி குறிப்பிட்டார். ஒரு தலைமுறையே அடுத்த தலைமுறைக்காக தியாகம் செய்ய வேண்டியுள்ளதாக கூறிய அவர், தனது வளர்ச்சியில் தனது பெற்றோர், சகோதரர்கள், ஆசிரியர்களின் தியாகம் ஒளிந்திருப்பதாக கூறியுள்ளார்.