தொடர்ந்து சரியும் இந்திய சந்தைகள்..
இந்திய பங்குச்சந்தைகளில் திங்கட்கிழமை ஏற்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் போர்ப்பதற்றம் தொடரும் நிலையில் இந்திய ப்பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. தொடக்கத்தில் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட நிலையில் பின்னர் ஏற்பட்ட சரிவு நாள் முழுவதும் தொடர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 638 புள்ளிகள் சரிந்து, 81ஆயிரத்து 50 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 218 புள்ளிகள் குறைந்து 24ஆயிரத்து 795 புள்ளிகளாக வர்த்தகத்தை முடிந்தது. என்டிபிசி, அதானி துறைமுகங்கள், அதானி என்டர்பிரைசர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன. ஐடிசி, பார்தி ஏர்டெல், டிரென்ட், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை புதிய உச்சமாக சவரன் 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று சவரன் 160 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 800 ரூபாயாக சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 103 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி விலை கிலோ ஒருலட்சத்து 3 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.