தொடர்ந்து உயரும் இந்திய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளிலும் பெரிய மாற்றமின்றி உயர்வுடன் பங்குச்சந்தை வணிகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கம் முதலே உயர்ந்து காணப்பட்டது. சென்செக்ஸ் 32.81 புள்ளிகள் உயர்ந்து 78 ஆயிரத்து 17 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 23,668 புள்ளிகளாகவும் வணிகத்தை நிறைவு செய்தன. தகவல் தொழில்நுட்பத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் சரிவில் முடிந்தன. குறிப்பாக உலோகம், ஆற்றல், டெலிகாம் நிறுவன பங்குகள் 1.5 விழுக்காடு வரை சரிவில் முடிந்தன. UltraTech Cement, Trent, Bajaj Finserv, Infosys, Grasim Industries ஆகிய நிறுவன பங்குகள் லாபம் கண்டன. IndusInd Bank, Dr Reddy’s Labs, Adani Enterprises, Coal India, Adani Portsஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. SBI Cards, JSW Holdings, Shree Cements, JSW Steel, Bajaj Finance, TCPL Packaging, Kotak Mahindra Bank, Chambal Fertilisers, Jupiter Life Line Hospitals உள்ளிட்ட 70 நிறுவன பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத உச்ச விலையை தொட்டன. திங்கட்கிழமை 120 ரூபாய் குறைந்த தங்கம் விலை, நேற்று மேலும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8185 ரூபாயாகவும், ஒரு சவரன் 65,480 ரூபாயாகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 110 ரூபாயாகவே தொடர்கிறது. கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டி கட்டாயம் செலுத்த வேண்டும், இதேபோல் கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரங்களையும் கூடுதலாக சேர்க்க வேண்டும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்…