சரிவில் இருந்து லேசாக மீண்ட இந்திய சந்தைகள்..
கடந்தவாரம் முழுவதும் சரிவில் இருந்து வந்த பங்குச்சந்தைகள் அக்டோபர் 8 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை லாபத்தை நோக்கி திரும்பியது. 6 நாட்கள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் சாதக சூழல் காணப்பட்டது. இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த வாரத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளான 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்றுவிட்டனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்து 81,634 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 217 புள்ளிகள் உயர்ந்தும் வணிகத்தை 25,013 புள்ளிகளில் முடித்தன. Trent, Adani Enterprises, Adani Ports, Bharat Electronics, M&M உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வில் முடிந்தன. Tata Steel, SBI Life Insurance, Titan Company, JSW Steel,Bajaj Finserv உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை கண்டன. உலோகத்துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் 1 முதல் 2 விழுக்காடு வரை உயர்வில் முடிந்தன. ஆட்டோமொபைல், வங்கி , சுகாதாரத்துறை, ரியல்எஸ்டேட் துறை, ஆற்றல், டெலிகாம், ஊடகத்துறைகளிலும் இதே அளவுக்கு பங்குகள் விலை உயர்ந்தன. Coforge, Ipca Labs, Trent, EPL, Dr Lal PathLab, Akzo Nobel, Dixon Technologies உள்ளிட்ட 150க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டன. புதுப்புது உச்சங்களை தொட்டு வந்த ஆபரணத்தங்கம் விலை அக்டோபர் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் மாற்றமின்றி 7ஆயிரத்து 100 ரூபாயாகவும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 102 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ஒருலட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக கட்டி வெள்ளி விற்கப்படுகிறது. இங்கே குறிப்பிட்டுள்ள விலைகளுடன் எல்லா கடைகளிலும் தங்கம்,வெள்ளிக்கு நிலையான 3 விழுக்காடு ஜிஎஸ்டியும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரமும் சேர்க்கப்படவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.