இந்திய ரூபாயின் மதிப்பு பிற நாடுகளை விட சிறப்பாக உள்ளது:நிர்மலா சீதாராமன்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் அமெரிக்க டாலருக்கு நிகராக அனைத்து நாடுகளின் பணங்களின் மதிப்பும் சரிந்துவருவதாக கூறினார். மேலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிறநாடுகளைப்போல இல்லாமல் இந்திய ரூபாயின் மதிப்பு அதிக ஏற்றத்தாழ்வு இன்றி நிலையாக உள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் காரணமாக உலகளவில் ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளாலும், அமெரிக்காவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் காரணமாகவும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அனைத்து வகை கடன்களின் விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் இந்திய ரூபாயின் மதிப்பு 81 ரூபாயை கடந்துள்ளது
இந்த சூழலில் சர்வதேச அளவில் உள்ள சூழலை மத்திய நிதியமைச்சகமும், மத்திய ரிசர்வ் வங்கியும் கூர்ந்து கவனித்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் பல நாடுகளின் பண மதிப்பும், டாலருக்கு நிகரான மதிப்பும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து பணத்தை இந்தியாவில் முதலீடுகளாக ஈர்க்க ரிசர்வ் வங்கி அணைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.