அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு சிக்கல்..

அமெரிக்காவில் தங்கி படித்து வரும் சர்வதேச மாணவர்கள் சிலரின் விசாக்களை ரத்து செய்து அமெரிக்க அரசு அதிரடி காட்டியுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சர்ச்சைக்கு உரிய வகையிலான பேரணிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விசா ரத்து செய்வது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அதில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் போராட்டங்களை ஆதரவு தெரிவித்திருந்தாலும் அவர்களின் விசாக்களும் ரத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 11லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு படிக்க செல்கின்றனர். அதில் 3லட்சத்து 31 ஆயிரம் பேர் இந்தியர்களாவர். எப், எம். ஜே விசாக்களில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த மாணவர்களும் இந்த புதிய அறிவிப்பில் பாதிக்கப்படுகின்றனர். தற்போது விசா பெற்று அமெரிக்காவில் தங்கியிருக்கும் மாணவர்களில் மின்னஞ்சல் பெற்றவர்கள் தாங்களாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், வருங்காலங்களிலும் அவர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் வகையில் புதிய மாற்றங்களை அமெரிக்க அரசு விதிகளை வகுத்துள்ளது. அண்மையில் கூட செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவில் தங்கியுள்ள மாணவர்களில் போராட்டம் நடத்தியோரை அமெரிக்க அரசு கண்டுபிடித்தது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு படிக்க வந்துவிட்டு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை ஏற்க முடியாது என்றே அதிகாரிகள் தங்கள் பார்வையை முன்வைக்கின்றனர். உலகில் மற்ற நாடுகளில் எந்த நடைமுறை உள்ளனவே அதையேதான் தாங்களும் செய்வதாக அமெரிக்க அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.