வெளிநாட்டு பண கையிருப்பு குறைந்தது..

இந்தியாவின் வெளிநாட்டு பண கையிருப்பு கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 2.5 பில்லியன் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88 ரூபாய் என்ற அளவை எட்டக்கூடாது என்ற காரணத்தால், இந்த முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. இந்தியாவிடம் தற்போதுள்ள வெளிநாட்டு பண கையிருப்பு 635.721 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி ரிசர்வ் வங்கி தரவுகளின்படி அப்போதைய பண கையிருப்பு 704 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
உரிய நேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி செயல்பட்டதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஒரு டாலர் 86ரூபாய் 67 பைசாவாக இருந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை இந்திய சந்தைகளில் இருந்து வெளியே எடுத்து வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் தற்போது வரை 11 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். இந்தியாவிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தில் ரொக்கப்பணம் மட்டும் 4.515 பில்லியன் குறைந்துள்ளது. ரொக்கப்பணத்தில் கணிசமான அளவு விலை வீழ்ச்சி கண்டிருந்தாலும், இந்தியா தனது முதலீட்டை தங்கத்தின் மீது அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடுகள் 1.942 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிகரித்துள்ள ரிசர்வ் வங்கி, மொத்த முதலீடுகளாக 74.150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு தங்கத்தில் முதலீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.