குறைந்தது இந்தியாவின் தொழில்வளர்ச்சி..

இந்தியாவின் தொழிற்சாலை வளர்ச்சி நவம்பர் மாதத்தில் குறைந்துள்ளதை அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி 5.4% ஆக பதிவாகியுள்ளது. 6.5% வரை வளர்ச்சி இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. எச்எஸ்பிசி நிறுவனத்தின் இந்திய வாங்கும் குறியீட்டு அளவு 57.5-ல் இருந்து 56.5ஆக கடந்தமாதம் குறைந்துள்ளது. பணவீக்கத்தால் இந்த சரிவு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் தொழில் வளர்ச்சி இந்தாண்டில் இரண்டாவது குறைந்தபட்ச அளவாகும். உற்பத்தி மற்றும் விற்பனை செலவுகள் அதிகரிப்பே இந்த சிக்கலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ரசாயனங்கள், பருத்தி, தோல் மற்றும் ரப்பரின் மூலப்பொருட்கள் விலையேற்றம் நவம்பரில் நடந்துள்ளது. இந்த விலையேற்றத்தை நிறுவனங்கள் தாங்கிக்கொள்ளாமல், கூலி, போக்குவரத்துச் செலவுகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டி விடுகின்றன. கடந்த அக்டோபர் மாத தரவுகளின்படி இந்தியாவின் பணவீக்கம் 6.21%அதிகமாக உள்ளது. இது கடந்த 14 மாதங்களில் மிகவும் அதிகம். தாங்கிக்கொள்ளும் அளவாக ரிசர்வ் வங்கி 2-6 விழுக்காடு வரை இருக்கலாம் என்று கூறியிருந்த நிலையில் அக்டோபர் மாத தரவுகள் கவலை அளிக்கின்றன. நிலைமை சிக்கலாகி வரும் நிலையில், கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையை ரிசர்வ் வங்கி அடுத்தாண்டுதான் கையில் எடுக்கும் என்றும் ஒரு தரப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.