இந்தியாவின் இளம் கோடீஸ்வரன்..4 மாத குழந்தையா?
இந்தியாவில் பிரபல மென்பொருள் நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரப்பையனுக்கு 240 கோடி ரூபாய் பங்குகளை எழுதி வைத்திருக்கிறார். ஏகாக்ரா ரோகன் முர்த்தி என்ற அந்த குழந்தையின் பேரில் 15 லட்சம் இன்போசிஸ் பங்குகள் உள்ளன. இது அந்நிறுவனத்தின் 0.004 சதவீதம் ஆகும். பேரக்குழந்தைக்கு எழுதி வைத்தது போக நாராயணமூர்த்தியிடம் 0.36 விழுக்காடு அளவுக்கு பங்குகள் கைவசம் இருக்கின்றன.
நாராயணமூர்த்தியின் மகன் ரோகன் மூர்த்திக்கும் மருமகள் அபர்னா கிருஷ்ணனுக்கும் ஆண் குழந்தை பிறந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதா மூர்த்தி தெரிவித்து இருந்தார். பிறந்த அந்த குழந்தை நாராயண மூர்த்தியின் 3 ஆவது பேரக்குழந்தையாகும். இந்த குழந்தையின் பெயருக்கு இலக்கு மற்றும் தீர்மானம் என்று அர்த்தமாகும்.
மகாபாரதத்தில் வரும் பெயரை பார்த்து இப்படி ஒரு பெயரை அந்த குடும்பத்தினர் சூட்டியுள்ளனர்.
1981-ல் வெறும் 250 டாலர்களில் தொடங்கிய இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பு, படிப்படியாக உயர்ந்து இந்தியாவின் இரண்டாவது பெரிய டெக் நிறுவனமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் மாறியுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்க சுதா மூர்த்தி காரணமாக இருந்தார். மேலும் 25 ஆண்டுகளாக அறக்கட்டளை பணிகளை தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவலாகும்.