மற்ற வங்கிகளுடன் கைகோர்க்கும் பிரபல வங்கி..

கார்பரேட் பிரிவு கடன்களில் இன்டஸ் இண்ட் வங்கி மற்ற முன்னணி வங்கிகளுடன் கைகோர்த்துள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்திக்கும் வகையிலான சிக்கல்களில் சிக்கியுள்ள இன்டஸ்இண்ட் வங்கி, தற்போது ஐசிஐசிஐ, ஃபெடரல் வங்கிகளுடன் கைகோர்த்து பணப்புழக்க உதவியை பெற்று வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த பணிகளில் இன்டஸ்இண்ட் வங்கி ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக நடக்கும் இந்த பரிவர்த்தனைகள் 10ஆயிரம் கோடி ரூபாயை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு வங்கிக்கு மற்றொரு வங்கி உதவும் கால அவகாசம் 6 மாதங்களாக இருக்கும். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை கடனாக அளித்தால், 400 கோடி ரூபாய் பணப்புழக்கம் அந்த வங்கிக்கு இலவசமாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை இன்டஸ்இண்ட் வங்கி வெளியிட்டால்தான், எவ்வளவு பணம் கடனாக அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும். மார்ச் 10 ஆம் தேதிக்கு பிறகு ஏதேனும் டெபாசிட்களை இன்டஸ்இண்ட் வங்கி இழந்திருக்கிறதா என்பது 4 ஆவது காலாண்டு முடிவுகளில் தெரிந்துவிடும். ஏற்கனவே அந்த வங்கியில் உள் வணிகத்தால் 1,600 கோடி ரூபாய் வரை சந்தை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏற்கனவே இழப்பை சந்தித்து வரும் இன்டஸ்இண்ட் வங்கி, 28விழுக்காடு வரை அந்நிறுவன பங்குகளை சரிய வைத்துள்ளது. 900 ரூபாயாக இருந்த அந்நிறுவன பங்குகள் 28 விழுக்காடு சரிந்து கடந்த வெள்ளிக்கிழமை 650 ரூபாயாக சரிந்தது. இழப்புகள் குறித்து ஆராய கிரான்ட் தார்ன்டன் பாரத் என்ற நிறுவனத்தை தணிக்கை செய்ய வங்கியின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது