ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கட்டுப்படுத்த முயற்சியா
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் இருவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய நிலையில் ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் சில நாட்களில் சக்தி காந்ததாஸின் பதவிக்காலமும் முடிவுக்கு வர இருக்கிறது. ரிசர்வ் வங்கி வரலாற்றிலேயே பெனேகல் ராமா ராவுக்கு பிறகு அதிக ஆண்டுகள் பதவியில் இருந்தவர் அதாவது 6 ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர் என்ற சக்தி காந்ததாஸ் பெற்றுள்ளார். ரிசர்வ் வங்கி தனது கடன் விகிதத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தவர் மூத்த பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன். அப்போது அவர் முன்வைத்த கோரிக்கை எடுபடவில்லை. இந்த சூழலில் கடந்த 14 ஆம் தேதி பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ,வட்டியை குறைக்க வேண்டும் என்றார். இதேபோல் கடந்த 18 ஆம் தேதி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன்கள் மீதான வட்டி விகிதம் கடுமையாக இருப்பதாக பொதுவெளியில் பேசினார். பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில் பொருளாதார அடிப்படையில் மத்திய அரசு பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அதனை அவர்கள் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே மத்திய ரிசர்வ் வங்கி கடன் விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் நிலையில், கடந்த அக்டோபரில் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.21விழுக்காடாக விலைவாசி உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் எப்படி வட்டி விகித்ததை குறைக்க முடியும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது. ரிசர்வ் வங்கி துணை ஆளுநரான மைக்கில் பத்ராவும் வரும் ஜனவரியில் ஓய்வுபெறும் நிலையில் அரசின் அழுத்தங்களை ரிசர்வ் வங்கி எதிர்த்து போரிடுவது கடினம் என்ற கருத்தும் நிலவுகிறது.