டிரம்ப் வந்ததால் இந்தியர்களுக்கு சாதகமா பாதகமா..?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியைபிடித்துவிட்டார். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தனது நிதி மற்றும் உலக பொருளாதார பாதுகாப்பு கொள்கைக்கு பெயர் பெற்றவர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், சில பொருட்களின் விலையை உயர்த்துவதுடன், வரிகளையும் குறைப்பார். இது அமெரிக்க பெடரல் ரிசர்வின் கொள்கையை மாற்றும். இதனால் உலக பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றம் நேரிடும், குறிப்பாக இந்திய சந்தைகளில் பெரிய தாக்கம் காணப்படும். வெளிநாட்டு கொள்கையில் சீனாவுக்கு மாற்றாக அமெரிக்காவுக்கு இந்தியாதான் சிறந்த துணையாக இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதம் குறைக்கும் முடிவை தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் இந்தியாவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் வெளியேறிவிடுவார்கள். இந்தியாவில் திறமையான பல பணியாளர்கள் உள்ள போதும், டிரம்ப்பின் திட்டங்களால் அமெரிக்கர்களுக்கு முதலில் வாய்ப்பு வழங்கப்படும் அதன் பிறகே இந்திய பணியாளர்களுக்கு கிடைக்கும். சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் டிரம்பால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். ரஷ்யா உக்ரைன் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் ஆயத்தமான பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் மீண்டும் வந்திருப்பதால் ரிஸ்கும் உண்டு அதே நேரம் புதிய வாய்ப்புகளும் இந்தியாவுக்கு உண்டு என்கிறார்கள் நிபுணர்கள்.