லிட்டருக்கு 3 ரூபாய் வரை இழப்பு..
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த சில்லறை வியாபார மையங்களில் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் பெட்ரோலில் இந்நிறுவனங்களுக்கு கிடைத்து வந்த லாபமும் கணிசமாக குறைந்திருக்கிறதாம்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் எண்ணெய் சந்தையில் 90 விழுக்காடு வரை பங்களிப்பை தருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக, பெட்ரோல்,டீசல் விலைகளில் பெரிதாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் முதல் 9 மாதங்களில் நல்ல லாபத்தை பதிவு செய்து வந்தன. எனினும் கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது பாதியில் இருந்து இந்நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் அதிகளவில் உற்பத்தி ஆகாத நிலையில் , 85 விழுக்காடு வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி தான் செய்யப்படுகிறது. கடந்த 9 மாதங்களில் மட்டும் இந்திய பெட்ரோலிய நிறுவனங்களுக்கு 69 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பதிவானது. இந்நிலையில் ஜனவரியில் விலை உயர்ந்திருந்த போதிலும் சாதாரண பொதுமக்கள் பாதிக்காத வகையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றவில்லை என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 22,000கோடி ரூபாய் இழப்பு நேரிட்டபோது சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அளிக்கப்படவில்லை. பின்னர் நிலைமை சரியானபோதும் அதே நிலை தொடர்ந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் நிலைமை ஓரளவு சீரடைந்திருப்பதாகஅவர்கள் தெரிவிக்கின்றனர். 70 டாலர்களில் இருந்த கச்சா எண்ணெய் நடப்பு நிதியாண்டில், சில மாதங்களில் 90 டாலர்கள் வரை உயர்ந்திருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பின்னர் விலை சரிந்தது. இருந்தபோதிலும் இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு பிறகு எரிபொருள் விலை எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.