மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, E20 பெட்ரோல் பாதுகாப்பானது. ஆனால், மைலேஜ், வேகத்தை குறைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்
மஹிந்திரா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஈ20 (E20) பெட்ரோல் பாதுகாப்பானது. ஆனால், மைலேஜ், வேகத்தை குறைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும், போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஈ20 குறித்த கவலைகள் பெட்ரோலிய நிறுவனங்களால் தூண்டப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவில் 20% எத்தனால் கலக்கப்பட்ட ஈ20 எரிபொருள், 90,000 எரிபொருள் நிலையங்களில் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவனத்தின் தானியங்கிப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி நலினிகாந்த் கோலகுண்டா, “இந்த எரிபொருள் பயன்பாடு பாதுகாப்பானது. ஆனால், மைலேஜ், வாகனத்தின் வேகம் சற்றுக் குறையக்கூடும்” எனத் தெரிவித்தார். இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாரம் ஒரு தகவலை அனுப்ப உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேபோல, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கமும் (Siam) ஈ20 எரிபொருள், பழைய வாகனங்களில் மைலேஜைக் குறைத்தாலும், பாதுகாப்புக்கு ஆபத்து இல்லை எனத் தெரிவித்திருந்தது.
2023-ல் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்தியா ஈ20 எரிபொருளை அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் இது கிடைக்கும் ஒரே தேர்வாக உள்ளது. ஆனால், மைலேஜ் குறைவு, என்ஜின் பாகங்கள் சேதமடைதல், பராமரிப்புச் செலவு அதிகரிப்பு போன்ற புகார்களைப் பல வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஈ20 எரிபொருள் குறித்த கவலைகள், பெட்ரோலிய லாபியால் (petroleum lobby) தூண்டப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இந்திய அரசு ஈ20 எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் செலவுகளுக்கும் உகந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருட்களுக்காக ரூ.22 லட்சம் கோடி செலவிடுகிறது என்றும், எத்தனால் பயன்பாடு இதை வெகுவாகக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோலில் எத்தனால் கலப்புச் சீராக முன்னேறி வரும் நிலையில், டீசலில் 5% பயோடீசல் கலக்கும் 2030ஆம் ஆண்டு இலக்கு சவால்களை எதிர்கொள்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு ஆய்வறிக்கையின்படி, 2024 நிதியாண்டில் பயோடீசல் கலப்பு 0.60% மட்டுமே இருந்தது. குறைந்த முதலீடு, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைச் சேகரிப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை இதற்கு முக்கியக் காரணங்கள்.
