மஸ்கை வரவேற்குமா டாடா, மஹிந்திரா நிறுவனங்கள்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறார். இந்த நிலையில் தாம் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு பதவி அளிப்பேன் என்றும் ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த வகையில் செயல்திறன் துறையின் முக்கிய தலைவர்களில் ஒருவராக மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபருக்கு நெருக்கமானவராக கருதப்படும் மஸ்க், இந்தியாவுக்கு அழுத்தம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், இந்திய அரசுக்கு அழுத்தம் தருவார்கள் என்று கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் டெஸ்லாவுக்கு அதிக சலுகைகள் கிடைக்க இருக்கின்றன. இந்தியாவில் தற்போதுள்ள மின்சார வாகன கொள்கையில் எலான் மஸ்க்குக்கு விருப்பம் இல்லை. இந்த நிலையில் கடந்தாண்டே இந்தியாவுக்கு வர இருந்த எலான் மஸ்க், கடைசி நேரத்தில் தனது பயணத்தை ஒத்தி வைத்தார். இந்தியாவின் புதிய மின்சார கொள்கையில் , 497 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதிய ஆலையை உருவாக்க வேண்டும், இதனை மஸ்க் எதிர்த்து வருகிறார்.சீனா மற்றும் ஐரோப்பாவில் ஆலைகளை வைத்துள்ள டெஸ்லா நிறுவனம், 3 ஆவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவே டெலிவரி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் பி இ 6இ, எக்ஸ் இவி 9ஈ,ஆகிய மின்சார கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 400 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் மின்சார கார்கள் வாங்கத் தயங்குவதற்கு பல காரணிகள் உள்ளதாக மஹிந்திராவின் தலைமை செயல் அதிகாரியான ராஜேஷ் ஜேஜுரிகர் கூறியுள்ளார். இந்த சூழலில் எம்ஜி நிறுவனத்தின் வின்டுசர் கார்களும் தங்கள் பேட்டரியை சேவையாக பயன்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவை தவிர்த்து டாடா நெக்சான் கார்களும் அதிகளவில் விற்கப்பட்டு வருகின்றன. இத்தனை நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், இந்தியா தனது மின்சார வாகன கொள்கையை மாற்ற திட்டமிட்டுள்ளது. ஜனவரியில் டிரம்ப் பதவியேற்றால் இந்தியாவில் டெஸ்லா வருவது தவிர்க்க முடியாததாகிவிடும், இந்த நிலையில் இந்தியா ஒரு ஆரோக்கியமான போட்டி தளமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை