உலகின் வசதியான பிச்சைக்காரர்..

ஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு வருமானமா என வடிவேலு வாய்ப்பிளக்கும் நகைச்சுவை காட்சி நிஜத்தில் மும்பையில் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரத் ஜெயின் என்பவர் பிச்சை எடுத்தே ஏழரை கோடி ரூபாய் சொத்து, 2 வீடுகள் வாங்கியுள்ளார். அதன் மதிப்பு 1.5கோடி ரூபாய். இது மட்டுமின்றி ஒரு மளிகைக்கடையையும் பரத் நடத்தி வருகிறார். ஒருநாளில் 12 மணி நேரம் இடைவிடாது பிச்சை எடுப்பதால் 2,500 ரூபாய் சம்பாதிப்பதாகவும், கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை எடுப்பதாகவும் அவர் கூறுகிறார். ஒருமாத வருவாயாக 75 ஆயிரம் ரூபாயை அவர் பெற்று வருகிறார். தானேவில் உள்ள தனது 2 கடைகள், 2 வீடுகளில் வாடகையாக மட்டுமே 30ஆயிரம் ரூபாய் தனி வருமானமும் வருகிறது. பிச்சை எடுத்து கிடைக்கும் வருவாயில் தனது குழந்தைகளை பிரபல தனியார் கான்வென்ட்டிலும் படிக்க வைக்கிறார். கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 24 மணி நேரம் பிச்சை எடுத்தால் எவ்வளவு சம்பாதிக்க முடிகிறது என்று வீடியோ பதிவு செய்தார் அவருக்கு கிடைத்ததோ வெறும் 34 ரூபாய். ஏற்கனவே ராஜஸ்தானைச் சேர்ந்த பெண்ணான இந்திரா பாய், தனது 5 குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து 45 நாட்களில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதித்த செய்தி வெளியாகியுள்ள நிலையில், மும்பையில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் சொத்து இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.