ரஷ்ய நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி டீல்..

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு12 முதல் 13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி ஒருநாளைக்கு 5லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கும். இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடாக ரஷ்யா இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ரஷ்ய அதிபர் புடின், இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ள இந்த நேரத்தில் ரிலையன்ஸின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. 1லட்சம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் மாதந்தோறும் ரஷ்யாவில் இருந்து ரிலையன்ஸுக்கு 3 கப்பல்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து நாள்தோறும் சராசரியாக 4.05லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விநியோகம் வரும் ஜனவரி முதல் நடக்க இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் தேவைப்பட்டால் மேலும் 10 ஆண்டுகளுக்கு கூட நீட்டிக்கப்பட வாய்ப்புள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.