50 கோடி ரூபாய்க்கு புதிய வீடுவாங்கிய நாராயணமூர்த்தி…

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸில் இரண்டாவதாக ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி வாங்கியிருக்கும் சொகுசு ஃபிளாட் 16 ஆவது மாடியில் உள்ளது. 8,400 சதுரடி கொண்டதாக அந்த அபார்ட்மன்ட் அமைந்துள்ளது. இதில் 4 பெட்ரூம்கள், 5 கார் பார்க்கிங்கும் அடங்கும். ஒரு சதுரடி 59,500 ரூபாயாக இந்த அபார்ட்மென்ட்டின் விலை மதிப்பிடப்பட்டுள்ளது. 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ், 3 பிரிவுகளில் 81 வீடுகளை கொண்டது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பூர்வீக வீடு அமைந்திருந்த அதே பகுதியில்தான் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டு விஜய்மல்லையா மற்றும் பிரஸ்டீஜ் குழுமம் இணைந்து உருவாக்கிய இந்த அபார்ட்மென்டில் 41 சொகுசு வீடுகளை பிரஸ்டீஜ் நிறுவனம் ஏற்கனவே விற்றுவிட்டது. அபார்ட்மென்ட்டில் வீடுகள் விற்கத் தொடங்கியபோது ஒரு சதுரடி 22,000 ரூபாயாக இருந்தது. மும்பையைச் சேர்ந்த ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த அபார்ட்மென்ட்டை வாங்கியிருந்தார். தற்போது அவரிடம் இருந்து நாராயண மூர்த்தி இந்த அபார்ட்மென்டை வாங்கியுள்ளார். சத்வானி ரியல் எஸ்டேட் நிறுவனம் இந்த வீட்டை மும்பையைச் சேர்ந்தவரிடம் இருந்து நாராயணமூர்த்திக்கு வாங்கிக் கொடுத்துள்ளது. ஆண்டுகளுக்கு முன்பு இதே அபார்ட்மென்ட்டில் சுதா மூர்த்தி 29 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்ட்மென்ட் வாங்கியிருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக ஆற்றல் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜின் மகன் ரானா ஜார்ஜ்ஜும் இதே அபார்ட்மென்ட்டில் 35 கோடி ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கியிருந்தார். 2017 ஆம் ஆண்டு குவஸ்ட் குளோபல் நிறுவனத்தின் சிஇஓ அஜித் பிரபு என்பவருக்கு எம்பசி குழுமம் ஒரு வீட்டை 50 கோடி ரூபாய்க்கு விற்றது. இதுதான் பெங்களூருவிலேயே பெரிய டீலாக இருந்தது. இந்நிலையில் தற்போது அதே தொகைக்கு நாராயணமூர்த்தி வாங்கியுள்ளார். பிரபு வாங்கிய வீடு ஹெப்பல் பகுதியில் 16,000 சதுரடி, ஆனால் தற்போது நாராயணமூர்த்தி வாங்கியுள்ளது அதில் பாதி அளவுதான் ஆனால் விலையோ 50 கோடி ரூபாயாகும். பிரபு வாங்கிய வீட்டின் விலை ஒரு சதுரடி 31,000 ரூபாயாகும்.