40ஆயிரம் கோடிக்கு புதிய ஆர்டர் ….
அமேசான்,ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாத கடைசி வாரத்தில் பண்டிகை கால சலுகைகளாக பொருட்களை விற்பனை செய்தன. இதில் மொத்தம் 40ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆர்டர்களை பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிகை கால விற்பனை மற்றும் சலுகைகள் பற்றி ரெட்சீர் என்ற நிறுவனம்,ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. அதன்படி மின்வணிக நிறுவனங்கள் தங்கள் வழக்கமான விற்பனையை விட 27%வளர்ச்சியை அதிகம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
40 ஆயிரம் கோடியில் ஃபிளிப்கார்ட் நிறுவன பங்கு மட்டும் 62% என மதிப்பிடப்பட்டுள்ளது, அமேசான் நிறுவனம் 26% பொருட்களை ஆர்டர் பெற்றுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் வழக்கமான நாட்களில் நடக்கும் வணிகத்தை விட ஃபெஸ்டிவ் சேல் நேரத்தில் 8 மடங்கு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகை கால சலுகையில் ஒரு மணி நேரத்துக்கு 56ஆயிரம் மொபைல்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.இதேபோல ஃபேஷன் துறை சார்ந்த பொருட்களின் விற்பனையும் சராசரியாக 20% பங்களிப்பை செய்துள்ளன.
பொருட்களை அதிக ஆர்டர் எடுத்தது ஃபிளிப்கார்ட் நிறுவனமாக இருந்தாலும், 2வது இடத்தில் மீஷோ நிறுவனமே பெற்றுள்ளது. இரண்டாம் தர நகரங்களில் மீஷோவை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளதால் அவர்களும் இதில் அதிக ஆர்வம் காட்டியதாக ரெட்சீர் அறிக்கை தெரிவிக்கிறது.
8 கோடி பேர் எல்லா வகையான வணிக நிறுவனங்களிலும் ஆர்டர்களை குவித்துள்ளதாக ரெட்சீர் தெரிவிக்கிறது.