நெக்சான், டியாகோ மின்சாரகார்கள் விலை குறைகிறது..
மின்சார வாகனங்களில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை குறைப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்கப்படும் மின்சார காரான நெக்சான் ஈவி கார் இதுவரை 14.5 லட்சம் ரூபாயில் இருந்து விற்கப்படுகிறது. இந்நிலையில் நெக்சான் ஈவி காரின் விலை 1.2லட்சம் குறைக்கப்படுகிறது.
இதேபோல் டியாகோ ரக மின்சார கார்கள் இப்போது வரை 7.99 முதல் விற்பனையாகிறது. இனி இந்த வகை கார்களின் விலையும் 70 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பஞ்ச் ரக மின்சார கார்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பேட்டரி செல்களின் விலை அண்மையில் குறைந்ததால் அதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவே இந்த விலை குறைப்பில் ஈடுபடுவதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. மிகவும் மதிப்பு மிக்க கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுசுக்கியிடம் இருந்து டாடா மோட்டார்ஸ் தட்டிப்பறித்தது. 2023 -ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 69,153 மின்சார கார்களை விற்றுள்ளது. இந்தாண்டில் மின்சார கார்களின் விற்பனை 40-45 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்சார வாகனங்கள் விற்பனை என்பது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது. கடந்தாண்டு நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முடியும்போது இந்தியாவில் விற்பனையாகும் மின்சார கார்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டாடா மோட்டார்ஸ், 40 விழுக்காடு வரை விற்பனையில் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக கர்வ், ஹாரியர்ஈவி, சியாரா மற்றும் ஆல்ட்ராஸ் ஆகிய மாடல்களில் மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்கள் இந்தாண்டின் இரண்டாவது பாதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.