பேடிஎம் பஞ்சாயத்தில் மாற்றமில்லையாம்..
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேமண்ட் வங்கியான பேடிஎம் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சக்திகாந்ததாஸ், வாடிக்கையாளர்களின் நலன்தான் முதலில் முக்கியம் என்று தெரிவித்தார். பேடிஎம் நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எந்த பகுப்பாய்வும் செய்யப்படவில்லை என்று சக்தி காந்ததாஸ் டெல்லியில் தெளிவுபடுத்தினார். ஒரு முடிவை ரிசர்வ் வங்கி எடுக்கிறது எனில் நன்கு ஆராய்ந்து,அதன் பிறகே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், போகிற போக்கில் எந்த முடிவும் எடுப்பது கிடையாது என்றும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களுக்கு ஆளான பேடிஎம் நிறுவனத்தின் மீது கடந்த 31 ஆம் தேதி ரிசர்வ் வங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒரு பகுதியாக வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் நிறுவனத்தின் டெபாசிட் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாஸ்ட் டேக், உள்ளிட்டஅம்சங்களுக்கு ரீசார்ஜ் செய்தாலும் வாலட்டில் பணம் டெபாசிட் ஆகாது. பல்வேறு வெளிப்புற கணக்கு தணிக்கைகளுக்கு பிறகே பேடிஎம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. நிதிநுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியைத்தான் தங்கள் வங்கி விரும்பவதாக கூறியுள்ள சக்தி காந்ததாஸ், சில முடிவுகள் சில மாதங்கள் ஏன் வருடக்கணக்காக கண்காணித்தே எடுக்கப்படுவதாக கருத்தை தெளிவாக கூறினார். நிதி நிலைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலனே தலையாய கடமை என்றும் சக்திகாந்ததாஸ் விளக்கியுள்ளார்.