எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகல!!!!
உலகப்புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், அண்மையில் தனது iphone 14 என்ற புதிய ரக ஆப்பிள் போன்களை அறிமுகப்படுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்த ஃபோன் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்று கூட சொல்லலாம். உலகம் முழுக்க 9 கோடி செல்போன்களை உற்பத்திசெய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் வாடிக்கையாளர்களின் வரவேற்பு குறைந்ததை அடுத்து 8 கோடியே 70 லட்சம் போன்கள் தயாரித்தால் போதும் என தங்கள் இலக்கை குறைத்துக் கொண்டுள்ளனர். சந்தையில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளைவிட மிகச்சிறப்பான செயல்பாடுகள் உடைய மலிவு விலை போன்களை மக்கள் அதிகம் நாடத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வரவேற்பு குறைவு ஒருபக்கம் இருக்க..சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவன போன்களை ஒருங்கிணைக்கும் செங்க் சாவ் ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உற்பத்தி குறைந்துவிட்டது என்ற தகவல் வெளியானதும் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளன. ஐபோன் 14-ஐ விட ஐபோன் புரோ மாடலுக்கு சந்தையில் அமோக வரவேற்பு உள்ளது, எனவே அந்த வகை செல்ஃபோன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் சீனாவில் இவ்வகை போன்கள் அதிகம் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.