பச்சை கோடு..லைஃப்டைம் வாரண்டி..ஒன்பிளஸ் அதிரடி..

பல ஆயிரம் ரூபாய் பணம் கொட்டிக்கொடுத்து வாங்கினாலும் ஒன்பிளஸ் ரக போன்களில் திரைக்கு நடுவே பச்சை கோடு விழும் பிரச்சனை வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காமல் போகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், தர பரிசோதனை நடவடிக்கைகள், வாழ்நாள் வாரண்டி உள்ளிட்ட அம்சங்களை ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ஒன்பிளஸ் போன் புதியதோ பழையதோ, அனைத்து போன்களுக்கும் லைஃப்டைம் வாரண்டி அளிக்கப்போவதாக அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமைச் செயல் அதிகாரியான ராபின் லியூ பேசுகையில், இந்த வகையில் இந்தியாவில்போன்களுக்கு லைஃப்டைம் வாரண்டி அளிக்கும் முதல் நிறுவனம் ஒன்பிளஸ்தான் என்றார். அமலோட் டிஸ்பிளேகளில் புதிய பாதுகாப்பு லேயர் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அந்த நிறுவனம், ஈரம் மற்றும் ஆக்சிஜனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 180 வகையான பரிசோதனைகளுக்கு பிறகே சந்தைக்கு அந்த போன்கள் வருவதாக கூறிய அந்நிறுவனம், இனி பச்சை கோடு விழும் பிரச்சனை இருக்காது என்று கூறியுள்ளனர். அண்மையில்தான் ஆயுட்காலம் முழுவதும் இலவச ஸ்க்ரீன் அப்கிரேடை ஒன்பிளஸ் நிறுவனம் தனது 8 புரோ, 8டி, 9, 9ஆர் ஆகிய மாடல்களில் அறிமுகப்படுத்தியது.