ஸ்னாக்ஸில் கவனம் செலுத்தும் பெப்சிகோ நிறுவனம்..

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இந்தியாவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படுவதால், அதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக பெப்சிகோநிறுவன தெற்காசிய சிஇஓ ஜக்ரட் கோட்டேச்சா தெரிவித்துள்ளார். குர்குரே, லேஸ் பாக்கெட்களை தயாரித்து வரும் பெப்சிகோ நிறுவனம், வளர்ந்து வரும் நகரமயமாதல் காரணமாக இந்த வணிகம் அதிகம் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவுகள் பிடிக்காது என்பதால் பன்முகத்தன்மையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் ஜக்ரட் கூறியுள்ளார்.
சுவை, சுகாதாரம், வாங்கி சாப்பிடுவோரின் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் உணவு தயாரிக்கும் பழக்கவழக்கம், சமைக்கும் விதிம் , அவர்கள் எதை குடிக்கிறார்கள் என்பதை நன்கு ஆராய அதிக தொகையை அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் பெப்சிகோ நிறுவனத்துக்கு உத்தரபிரதேச மாநிலம் மதுராவிலும், பஞ்சாப் மாநிலம் சன்னோ, புனேவின் ரஞ்சன் கோன் உள்ளிட்ட பகுதிகளில் ஆலைகள் உள்ளன. இந்த நிலையில் அசாமில் புதிய உற்பத்தி ஆலையை பெப்சி நிறுவனம் தொடங்க இருக்கிறது. தென்னிந்தியாவில் ஒரு ஆலையை தொடங்கவும் அந்நிறுவனம் ஆலோசித்து வருகிறது. லேஸ், குர்குரே, டொரிடோஸ், குவேகர் ஓட்ஸ் ஆகிய நிறுவனங்களின் வியாபாரம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இந்தியாவில் லேஸ் சிப்ஸ் பாக்கெட்டில் உள்ள மேஜிக் மசாலா பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தென்னிந்தியர்கள்காரம் அதிகம் சாப்பிடுவர். அதேபோல் சிப்ஸை ஃபிரை செய்யும் எண்ணெயும் கிழக்குப்பகுதியில் கடுகு எண்ணெயும், தென்பகுதியில் நல்லெண்ணையும் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப், குஜராத், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், அசாமில், சிப்ஸ் செய்ய உகந்த அளவுக்கான உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய 27 ஆயிரம் உருளை விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. பஞ்சாபில் உள்ள சஹூரா பகுதியில் தனியாக ஆராய்ச்சிமையத்தையும் பெப்சிகோ நிறுவனம் கொண்டுள்ளது.