தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாகி கைது
தேசிய பங்குச்சந்தை NSEயின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் ரவி நரைன். இவர் தலைமையில் நிர்வாகம் நடந்து வந்தபோது தேசிய பங்குச்சந்தையில் ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று இரவு அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். 2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக இதுவரை தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாகிகள் , கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை தயார் செய்தது. இதே புகாரில் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணனும் ஜூலையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மும்பையின் முன்னாள் போலீஸ் ஆணையர் சஞ்சய் பாண்டேவும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த பெரும்புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது. அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ரவி இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.