100 டன் தங்கத்தை வாங்கிய போலந்து..
உலகிலேயே அதிக தங்கத்தை ஒரே நேரத்தில் வாங்கிய நாடாக போலந்து மாறியுள்ளது. புளூம்பர்க் நிறுவனத்தின் அறிக்கையின்படி, போலந்து மத்திய வங்கி, 100 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார சமநிலையற்ற சூழல் காரணமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனர். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு மிகுந்த ஆதரவு அளித்து வரும் போலந்து நாடு, தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் நோட்டு அச்சிடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. செக் குடியரசு, ஹங்கேரி மற்றும் செர்பியா ஆகிய நாடுகளும் தங்கத்தை அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளன. போலந்து ஒரே நேரத்தில் அதிக தங்கத்தை வாங்கியுள்ள நிலையில் உலகளவில் தங்கத்தின் விலை உயரும் சூழல் காணப்படுகிறது. தேவைப்படும் அவசர நேரத்தில் தங்கம் தான் கைகொடுப்பதாக கூறப்படும் நிலையில் போலந்து மத்திய வங்கி இந்த முடிவை எட்டியுள்ளது. இதற்கு முன்பு வரலாற்றில் கற்ற பாடங்கள், போர்கள், பொருளாதார சமநிலையற்ற சூழல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வருங்காலத்தை குறிக்கோளாக வைத்து இந்த முயற்சியை போலந்து எடுத்துள்ளது.