தனியார் டெலிகாம் நிறுவனங்கள் காட்டில் கொட்டும் பண மழை..
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கடந்த காலாண்டில் சந்தாதாரர்களை கணிசமாக இழந்துள்ளநிலையில், வருவாயை அதிகரித்துள்ளன. சென்ட்ரம் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அண்மையில் உயர்த்தப்பட்ட கட்டணத்தால் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் சந்தாவை உயர்த்தின. இதன்விளைவாக மாதாந்திர சராசரி வருவாயாக ஏர்டெல் நிறுவனம் ஒரு நபரிடம் இருந்து 233 ரூபாய் வசூலிக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த தொகை மாதம் 211 ரூபாயாக இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது. ஒரு சந்தாதாரர் இடம் இருந்து 195 ரூபாயை மாதம் வசூலிக்கிறது ஜியோ. இது முதல் காலாண்டில் சராசரியாக 182 ரூபாயாக இருந்தது. அதே நேரம் வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் மாதாந்திர சராசரி வருவாய் 156 ரூபாயாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வசூலித்து வருகிறது. இது கடந்த காலாண்டில் 146 ரூபாயாக இருந்தது. உயர்த்தப்பட்ட கட்டணம் வரும் காலாண்டுகளில் லாபத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 29லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களில் 1கோடியே 90லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. வோடஃபோன் நிறுவனம் 51லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தனியார் நிறுவனங்களே வேண்டாம் என அரசு நடத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பலரும் தாவியுள்ளனர்.
வருவாயை பெருக்கும் அதே நேரம் 5ஜி சேவைகளை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஜியோவில் 1கோடியே 48லட்சம் பேரும், ஏர்டெலில் 1 கோடியே 5லட்சம் பேரும் 5ஜி சேவைக்கு மாறியுள்ளனர். வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளில் 24 %அரசின் வசம் உள்ளன.அந்த நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் 5ஜி சேவையை வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் கடன் 2 டிரில்லியன் இந்திய ரூபாயாக உயர்ந்துள்ளது.